Monday 17 December 2018

மார்கழி மாத விரதங்கள்

மார்கழி மாத முக்கிய விரதங்கள் அறிவோம்.




மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். 

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும் பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீமந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது.  




பாவை நோன்பு : 

மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

திருவெம்பாவை நோன்பு : 

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும். பாவை நோன்பு, கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் போற்றப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விரதம் :

மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார் என்பது ஐதீகம். இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். 

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைபிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும், மோட்ச ஏகாதசி என்றும், பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.

திருவாதிரை நோன்பு : 

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் இருக்கும் ஒரு நோன்பாகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. 

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. விரதத்தைக் கடைபிடிப்போர் திருவாதிரை தினத்தில் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். இந்நாளில் பெண்கள் மாங்கல்ய பலனுக்காக நோன்பு இருப்பார்கள். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.
மார்கழி மாதத்தில் கடவுளின் அருள் பெற வழிபாடு செய்வோம் வளம் பெறுவோம்

No comments:

Post a Comment

மார்கழி மாத விரதங்கள்

மார்கழி மாத முக்கிய விரதங்கள் அறிவோம். மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மா...